search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் தொகுதி"

    8 முறை வென்ற அ.தி.மு.க.வை வீழ்த்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடைசி வரை பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளில் டாக்டர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்றார்.

    எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி 83 ஆயிரத்து 38 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் 12 ஆயிரத்து 610 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி 5 ஆயிரத்து 467 ஓட்டுகளும் பெற்றனர்.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆயிரத்து 396 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடினார்.

    ஓட்டு எண்ணிக்கையின்போது இந்த தொகுதியில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 8 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அ.தி.மு.க.வை விட கூடுதல் வாக்குகளை பெற்று வந்தார்.

    9 முதல் 11 சுற்றுகள் எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி கூடுதல் வாக்குகளை பெற்றார். அதுபோல 12 முதல் 16 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடுதல் வாக்குகளை பெற்ற வண்ணம் இருந்தனர். மாறி மாறி முன்னிலை வகித்ததால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே அவ்வப்போது சலசலப்பும், பரபரப்பும் நிலவியது.

    அடுத்ததாக 17 முதல் 19 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். 20-வது சுற்றில் மீண்டும் அ.தி.மு.க. பக்கம் முன்னிலை கிடைத்தது. ஆனால் 21, 22 ஆகிய சுற்றுகளில் தி.மு.க. கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

    திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அ.ம.மு.க. 31 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்றுள்ளது. இது அ.தி.மு.க.வின் வெற்றியை தடுத்து விட்டதாக அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ஆனாலும் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் கிடைத்த திருப்பரங்குன்றம் வெற்றிக்கனி பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொகுதியில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று அ.தி.மு.க. தனது கோட்டையாகவே வைத்திருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு கிட்டவில்லை.

    கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், வாக்குகள் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் அ.தி.மு.க.வினரும் வெற்றியை தவற விட்டதில் சோகமாகவே உள்ளனர்.
    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

    சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    அரசியல் கட்சியினர் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று நடிகை கோவைசரளா பிரசார கூட்டத்தில் பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகை கோவை சரளா பிரசாரம் செய்தார்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மக்களிடம் வாக்குக்கு பணம் கொடுத்துவிட்டு அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். பணத்தின் மீது மக்களுக்கு ஆசையை தூண்டிவிட்டு அடிமையாக்கி வருகின்றனர்.

    இவ்வளவு காலம் ஆட்சி செய்தவர்கள் சாலை வசதிகள் கூட செய்துதரவில்லை.

    நாங்கள் அரசியல்வாதி கிடையாது. எப்போதும் மக்களோடு, குடும்பத்தினராக உள்ளோம். எங்களுடைய வேட்பாளர் மக்களுக்காக செயல்படவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வார்.

    தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சியினர் ஏதும் செய்யாமல், தங்களது குடும்பத்தினர்களுக்கே சொத்து சேர்க்கின்றனர்.

    ஆட்சியில் இருக்கும் போது ஏதும் செய்யாமல் தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்தவர் தான் கமல்ஹாசன். அவரை பார்த்து சிலர், இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று நக்கல், நையாண்டி செய்கின்றனர்.



    கமல்ஹாசன் வரலாறு, புவியியல், அறிவியல் அனைத்தும் அறிந்து தனக்கு தகுதி உள்ளதா? என்று பார்த்து தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.

    கமல்ஹாசனை பார்த்து உங்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்று கேட்பவர்கள் அனைவரும் பிறக்கும்போது அரசியல் கட்சியின் துண்டை போர்த்திக் கொண்டா பிறந்தார்கள்?

    இவ்வாறு அவர் பேசினார்.
    மோடியும், எடப்பாடியும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    புளியங்குளம் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். புளியங்குளத்தில் நடந்த திண்ணை பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    நான் கலைஞரின் மகன். சொன்னதைதான் செய்வேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும். தி.மு.க. என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனை பேணுகின்ற இயக்கம்தான் தி.மு.க.

    புளியங்குளத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. ஆட்சியில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களால் எந்த அளவுக்கு மக்கள் பணி செய்ய முடியுமோ அந்த வகையில் பணியாற்றி வருகிறோம்.

    விரைவில் தமிழகத்தில் விடிவுகாலம் பிறக்க உள்ளது. அதற்கு திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதிக்க வேண்டும். எனவே நீங்கள் எல்லோரும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடியும், மாநிலத்தை ஆளுகின்ற எடப்பாடியும் எதிராக செயல்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி வெளி நாட்டுவாழ் பிரதமர் போல இருக்கிறார். அவருக்கு இந்தியா மேல் அக்கறை இல்லை. தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் மோடி ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுகிறார்.

    உலகம் சுற்றும் நரேந்திர மோடி இதுவரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு மத்தியில் பிரதமராக மோடி இருக்க மாட்டார். அதுபோல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்க மாட்டார்.

    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார். அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவார் என்று சக்திவேல் கூறினார்.
    எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    நான் இல்லாத நேரத்தில் எனது அறையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது மிகவும் பாரபட்சமானது. திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். அவர்களின் அறைகளில் ஏன் சோதனை நடத்தவில்லை.

    காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பரங்குன்றம் தொகுதியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பரங்குன்றம், மே. 13-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 மற்றும் 6-ந்தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக அவர் இன்று மாலை 5 மணிக்கு தொகுதிக் குட்பட்ட வலையன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கு கிறார்.

    அதைத்தொடர்ந்து சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், சின்ன அனுப் பானடி, ஐராவதநல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய் கிறார்.

    இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். #TNByPolls
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 6-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் அவர் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் 2-வது கட்ட மாக பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து வடபழஞ்சி தனக்கன்குளம், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.  #TNByPolls
    திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju
    அவனியாபுரம்:

    மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும். அதுகுறித்து எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.


    முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை புறநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் கண்மாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டது. ஆனால், அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.



    ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    ×